You are not connected. Please login or register

Post-#130/4/2014, 1:26 pm

Aditya Sundar

JOIN TODAY

வாயை மூடிப் பேசவும் - விமர்சனம் Empty வாயை மூடிப் பேசவும் - விமர்சனம்


நடிகர்கள் : துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், மதுபாலா, பாண்டியராஜன்
ஒளிப்பதிவு : சௌந்தர்ராஜன்
இசை : சியல் ரால்டன்
பிஆர்ஓ: நிகில்
தயாரிப்பு : ரேடியன்ஸ் மீடியா, ஒய்நாட் ஸ்டுடியோஸ்
இயக்கம் : பாலாஜி மோகன்

தமிழ் சினிமாவில் இந்தப் படம் கொஞ்சம் புதிய முயற்சிதான். அதிலும் மனிதர்கள், குறிப்பாக உறவுகள் மனம் விட்டுப் பேசினால் எல்லாமே சரியாகிவிடும், என்ற நல்ல விஷயத்தை, ஒரு புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

அந்த முயற்சியில் ஜெயித்தார்களா என்பதை... பார்ப்போம்.

பனிமலை என்றொரு கிராமம். ஹீரோ துல்கர் சல்மான் இங்குதான் வசிக்கிறார். மார்க்கெட்டிங் துறையில் வேலை. இந்த ஊரில் ஊமைக் காய்ச்சல் என்ற நோய் பரவ, அதில் பாதிக்கப்பட்டவர்கள் பேச்சிழக்கின்றனர். மக்கள் பேசுவதால்தான் ஊமையாகிறார்கள் என நினைத்து பேசத் தடை விதிக்கிறது அரசு.

நாயகி நஸ்ரியா அதே ஊரில் மருத்துவமனையில் பணிபுரிகிறார். நஸ்ரியாவுக்கு உறவினரை திருமணம் செய்ய வீட்டில் முயற்சிக்கிறார்கள். அவருக்கோ துல்கர் சல்மான் மீது காதல். ஆனால் இருவரும் காதலைச் சொல்லிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

மக்கள் வாய் திறந்து பேசினார்களா... அல்லது வாய் மூடி மௌனம் பேசினார்களா, நஸ்ரியா - சல்மான் காதலில் இணைந்தார்களா என்பது மீதிக் கதை.

படத்தில் நிறைய பாத்திரங்கள். அவர்களை அறிமுகப்படுத்தவே கிட்டத்தட்ட முக்கால் மணிநேரத்தை எடுத்துக் கொள்கிறார் இயக்குநர். ஆனால் கதையிலிருந்து விலகாமல், சுவாரஸ்யமாக அதை அவர் செய்திருப்பதால் அலுக்காமல் நகர்கின்றன ஆரம்ப நிமிடங்கள்.

படத்தின் பலம் ஹீரோ - ஹீரோயின் இருவரும்தான். ரொம்ப மலர்ச்சியாக சுறுசுறுப்புடன் தெரிகிறார்கள்.

துல்கர் சல்மான் தமிழில் பிரமாதமாக வர வாய்ப்பிருக்கிறது. அவரது தோற்றம், பாடி லாங்குவேஜ் எல்லாமே கச்சிதமாக உள்ளது. குறிப்பாக அவரது தமிழ் உச்சரிப்பு (சென்னைப் பையனாச்சே!). வெல்கம்!

நஸ்ரியாவுக்கு அமைதியான, பெரும்பாலும் சிடுசிடு முகத்துடன் வரவேண்டிய பாத்திரம். இயல்பாகச் செய்திருக்கிறார்.

உளறல் அரசியல்வாதியாக வரும் பாண்டியராஜன், குடிகாரராக வந்த விஜயகாந்தை இமிடேட் செய்யும் ரோபோ ஷங்கர், நடிகராக வரும் ஜான் விஜய் (விஜய்யை ஓட்டுகிறாரோ?), டிவி அறிவிப்பாளராக வரும் பாலாஜி, நீண்ட நாளைக்குப் பின் தலைகாட்டும் மதுபாலா, வினுச்சக்கரவர்த்தி... இப்படி எல்லாருமே வித்தியாசமான பாத்திரங்களில் கவர்கிறார்கள்.

முதல்பாதியில் வசனங்களில் விளையாடும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் மௌன மொழியில் கொஞ்சம் நொண்டியடிக்கிறது (ரொம்ப நேரம் படத்தில் வசனங்களே இல்லாத சூழலில், லேசாக கொர்ர்... முன் சீட்டிலிருந்து! ) அதுவே படத்துக்கு வில்லனாகவும் மாறிவிடுகிறது.

இன்னொன்று அடுத்து என்ன என்ற விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை.

சௌந்தர்ராஜனின் கேமராவில் அந்த மலைக் கிராமம் மனதை கொள்ளையடிக்கிறது. பின்னணி இசை ஓகே என்றாலும் பாடல்கள் எதுவும் தேறவில்லை.

இயக்குநர் பாலாஜி மோகன் இப்படியொரு கதையை எடுத்து படமாக்கியது பெரிய விஷயம்தான். அதற்குள் எவ்வளவு முடியுமோ அந்த அளவு சமகால நிகழ்வுகளை நக்கலடித்திருக்கிறார், ரசிக்கும்படி. இதுபோன்ற பரீட்சார்த்தங்களை பாராட்டினால் மட்டுமே போதாது. போய்ப் பார்க்கவும் வேண்டும், இதுபோன்ற வித்தியாச முயற்சிகள் தொடர!

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum