கடந்த ஒருமாதகாலமாக சதமடித்து வந்த வெயில் இன்றைக்கு சற்றே குறைந்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 96.8 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. உதகையில் மிக குறைந்த பட்சமாக 66டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 96.8 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. வெயிலடித்தாலும் மேகமூட்டம் இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை என்கின்றனர்.
நேற்றைய தினத்தை விட திருச்சி, தஞ்சையில் வெயில் சற்றே குறைந்துள்ளது. இன்றைக்கு 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரத்திலும் 95 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவை, திருப்பூரில் 93.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகாசி, அருப்புக்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் 87 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
கடலூரில் 89.6 டிகிரி வெப்பமும், ஈரோடு, சேலத்தில், தூத்துக்குடியில் 86 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. அதேசமயம் வேலூர், திருவண்ணாமலையில் 84.2 டிகிரி அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது.
உதகமண்டலத்தில் மிக குறைந்த பட்ச அளவாக 66.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த ஆண்டு வெயிலின் அளவு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் 100 டிகிரியை வெயில் தாண்டி விட்டது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காற்றில் ஈரப்பதம் குறைந்த காரணத்தால் அனல்காற்று பயங்கரமாக வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 2003-ம் ஆண்டு மே 31-ந் தேதி உச்சகட்ட வெயில் அளவாக 113 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. அதே போல் இந்த ஆண்டும் 113 டிகிரி வரை வெப்பம் வாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இடியுடன் கூடிய கோடை மழை சில பகுதிகளில் மட்டுமே எதிர்பார்க்க முடியும். கடற்கரையோர பகுதிகளில் மாலை 6 மணிக்கு பிறகுதான் ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசும். பகலில் அதிக வெப்பம் நிலவுவதால் மாலை இரவு நேரங்களிலும் புழுக்கம் அதிகமாகவே இருக்கும். மே மாதம் முடிய வெப்பத்தின் அளவு குறைய வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் அதிக பட்சமாக குஜராத்தில் 112 டிகிரி வரை இப்போது வெப்பம் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்த படியாக ஜெய்ப்பூரில் 111 டிகிரியும், நாக்பூரில் 110 டிகிரியும் வெப்பம் நிலவுகிறது. தமிழ் நாட்டில் இந்த ஆண்டு திருச்சியில் அதிக அளவு வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மதிய வேளையில் மக்கள் குடை பிடித்து செல்ல தொடங்கி விட்டனர். பெண்களில் பலர் தங்களது கை, கால், முதுகு பகுதி வெயிலில் பட்டு கறுத்துவிடாமல் இருக்க சேலை, துப்பட்டாவால் மூடியபடி செல்கின்றனர்.
