இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே சேதிய அமைப்பின் சம்மேளனம் இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. இந்நிலையில் அந்த போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இலங்கை போலீஸ் உயர் அதிகாரி லக்ருவன் வன்னியராச்சி என்பவர் வெளியிட்டுள்ளார்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜெயலலிதாவுக்கு கொம்பு வைத்தது போன்ற புகைப்படம் அடங்கிய பலகையை ஏந்தி வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி என்ன சர்வாதிகாரியா அல்லது ஜனநாயகவாதியா என்று கேள்வி எழுப்பிய பலகையை போராட்டக்காரர்கள் ஏந்தி வந்தனர்.
போராட்டக்காரர்கள் வைத்திருந்த பலகையில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு கீழ் எ புல் இன் தி சைனா ஷாப் (A Bull in the China Shop) என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
போராட்டக்காரர்கள் ராஜபக்சேவின் புகைப்படம் அடங்கிய பலகையை வைத்திருந்தனர். அதில் இனி அடிபணியப் போவது இல்லை, சரணடையப் போவது இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.
இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடுவதை கண்டிப்பதாக எழுதப்பட்டிருந்த பேனரை போராட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர். இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.